கத்தரில் குடியரசு தின ஓவியப்போட்டி: பதிவு துவக்கம்!


தோஹா: இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களின் பாகமாக, 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அமைப்பான "மலர்வாடி", மலபார் கோல்ட் & டயமன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது ஓவியப்போட்டி நடத்த உள்ளது.

கத்தரில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அமைப்பான "மலர்வாடி" ஆண்டு தோறும் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறது. வருகிற குடியரசு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி ஒன்று நடத்த உள்ளது. இதில், மழலையர் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்புவரை இந்தியப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் குழந்தைகளை அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் கிட்ஸ், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டி நடத்தப்படும்.

ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வரும் குழந்தைகளுக்கு மலபார் கோல்ட் நிறுவனம் வழங்கும் தங்கப்பதக்கமும் தொடர்ந்து 10 இடங்களில் வரும் குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 3000 க்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொண்டனர். இவ்வாண்டு அதனைவிட கூடுதலாக எதிர்பார்க்கிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கவேண்டும்" என மலர்வாடி ஒருங்கிணைப்பாளர் அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
"இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் நாளை முதல் எல்லா இந்திய பள்ளிகளிலும் வழங்கப்படும். கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்து வரும் 23, ஜனவரி 2014 க்குள் அவரவர் வகுப்பு ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு, நுழைவுச்சீட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடம், நாள், போட்டி விதிகள் முதலான விவரங்கள் அவரவர் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

நிகழ்ச்சி நடைபெறும் அன்று ஓவியப்போட்டி அல்லாது, குழந்தைகளை மகிழ்விக்கும்படியான பல்வேறு நிகழ்ச்சிகளும் 'என் குடும்பம்; மகிழ்ச்சியான குடும்பம்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜலீல் கூறினார்.

நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 55258100/55442789/70632633/55298247

Comments